கட்டுரை

ஓபிஎஸ்..!  நம்பியவர்கள் நிலை? 

Staff Writer

கடந்த இதழ் அந்திமழையில் எடப்பாடி கை ஓங்குகிறதா? என்று தலைப்பு வைத்தாலும் வைத்தோம். ஏகப்பட்ட நிகழ்வுகள். இதழ் வெளியாகி ஈபிஎஸ் தரப்புக்கு சின்னம் கிடைத்து, ஓபிஎஸ் தரப்பு தங்கள் வேட்பாளரை ஈரோடு தொகுதியில் வாபஸ் பெற்று, கடைசியில் உச்சநீதிமன்றம் எடப்பாடியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்ய கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த பொதுக்குழு செல்லும் என தீர்ப்பே அளித்துவிட்டது. நண்பர்களும் வாசகர்களும் நம்மை நமுட்டு சிரிப்புடன் பாராட்டி ஓய்ந்துவிட்டனர். பொதுவாக சங்கிலித் தொடராக நடக்கும் அரசியல் நடவடிக்கைகளில் அந்திமழை அரசியல் பதிவு செய்வதில்லை என்றாலும் அது விதிவிலக்காக அமைந்த ஒரு கட்டுரை.

இந்த உலகத்திலேயே மிக அதிர்ஷ்டசாலியான  அரசியல்வாதி ஒருவர் உண்டென்றால் அது ஓ.பன்னீர்செல்வம் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். டிடிவி தினகரனால் பெரியகுளத்தில் அடையாளம் காணப்பட்டு எம்.எல்.ஏ ஆகி, 2001-இல் அரசியல் மாற்றங்களால் அவர் முதல் அமைச்சர் ஆக உட்கார வைக்கப்பட்டபோது மூக்கில் விரல் வைக்காதவர்கள் யாருமில்லை. பிறகு மீண்டும் அதே அரசியல் காரணங்களால் 2014-இல் முதலமைச்சர் பதவி. இந்த இரண்டு தடவையும் மிகவும் பணிவுடன் நாற்காலியைத் திரும்ப ஒப்படைத்தார் ஓபிஎஸ்.

 ஜெயலலிதா 2016 டிசம்பரில் இறந்தபின் மூன்றாவது முறையாக முதல்வர் ஆனார் இந்த காலகட்டத்தில் அவருக்குள் மாற்றங்கள் ஏற்பட்டன. இம்முறை சசிகலாவின் வற்புறுத்தலால் அவருக்காக பதவியை ராஜினாமா செய்து, அவரை முதல்வர் பொறுப்பை ஏற்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய அதிமுக குழுவிலும் இருந்துவிட்டு, ‘தர்மயுத்தம்‘ என்று ஜெயலலிதாவின் சமாதியில் உட்கார்ந்தபோது, ஓபிஎஸ் எல்லோரையும் குழப்பினாலும் பொதுவான பலர் அவருக்கு ஆதரவாகவே இருந்தார்கள். முக்கியமாக பாஜக தரப்பின் ஆதரவு இருந்தது.

ஆனால் சசிகலா, எடப்பாடியை முதலமைச்சராக தேர்வு செய்துவிட்டு, சிறைக்குச் சென்றார். ஓபிஎஸ் கட்சியை விட்டே நீக்கப்பட்டிருந்ததும், பின்னர் சசிகலாவின் பிடியிலிருந்து திமிறிக்கொண்டு மீண்டு, எடப்பாடி சுதந்தரமாகி, பாஜக பேச்சுவார்த்தையில் இருதரப்பும் ஒன்று சேர்ந்து பன்னீர் துணை முதல்வராக பதவியில் நீடித்ததும் அனைவருக்கும் தெரிந்ததே.

 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் அடைந்த தோல்விக்குப் பின்னர் இரட்டைத் தலைமையிலிருந்து விலகி, எடப்பாடி தலைமையில் ஒற்றைத் தலைமையே சிறந்தது என குரல் எழுந்து, 2022 ஜூலை 11 ஆம் தேதி கூடிய பொதுக்குழுவில் ஓபிஎஸ்ஸும் அவரது ஆதரவாளர்களும் கட்சியை விட்டே நீக்கப்பட்டனர்.

அதே நாளில் அதிமுக தலைமை நிலையத்தைக் கைப்பற்ற ஒபிஎஸ் ஆட்கள் முயற்சி செய்ய, பன்னீர் செல்வமும் அங்கே நுழைந்தார். பெரும் மோதல் வெடித்து, கட்சி அலுவலகம் சீல் வைக்கப்பட்டு, பின்னர் அது பழனிசாமி வசம் வந்தது.

“ஓபிஎஸ் மேற்கொண்ட ஒரே அதிரடி நடவடிக்கை அந்த அலுவலக நுழைவு நடவடிக்கை  மட்டும்தான். அதற்கு மட்டுதான் அவர் சற்று கஜனாவைத் திறந்து செலவழித்தார். அதன் பின்னர் இறுக்க மூடிக்கொண்டார். இல்லையென்றால் இவ்வளவு பேர் எடப்பாடிக்கு ஆதரவாகச் சென்றிருக்கமாட்டார்கள்,' என்று கூறினார் முன்னாள் ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவர்.

மத்திய அரசு. பாஜக தலைவர்கள் ஆதரவு தனக்கு இருப்பதால் அதிமுகவை மீண்டும் கௌரவமாகக் கைப்பற்றிவிடமுடியும் என பன்னீர் செல்வம் நினைத்திருக்கலாம். ஆனால் தங்களுக்கு எது நலனோ, யாரால் அதிமுக வாக்குகளை அதிகம் பெற நடைமுறையில் இயலுமோ அவர்களுக்கே பாஜக ஆதரவு தரமுடியும். இதுவே ஈரோடு இடைத் தேர்தலில் பாஜக எடப்பாடி அணிக்கே ஆதரவாக நின்றதில்  பிரதிபலித்தது.

இன்னும் சட்டபோராட்டங்கள் நடத்த பன்னீர்செல்வத்துக்கு வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவற்றில் தீர்ப்புகள் வர நெடுங்காலம் பிடிக்கும். அதற்குள் எடப்பாடியின் இரும்புப்பிடிக்குள் அதிமுக சென்றிருக்கும் என்பதால் பன்னீர்செல்வத்தின் வாய்ப்புகள் மங்கி இருப்பதாகவே தெரிகிறது.

அரசியல் வாழ்க்கையில் வெற்றிபெற ரிஸ்க் எடுத்தே தீரவேண்டும். நேரடியாகக் களம் காண வேண்டும். இவ்விரண்டிலும் பன்னீர்செல்வம் பின் தங்கினார். எனவேதான் பெருமளவுக்கு மக்களிடையே அறிமுகம் இருந்தும் எடப்பாடியிடம் அவர் பின் தங்கிச் செல்ல நேர்ந்தது.‘ சமமான சண்டைகூட இல்லை. அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடிக்கும்  ஓபிஎஸ்ஸுக்கும் இருக்கும் ஆதரவாளர் எண்ணிக்கையைப் பார்த்தால் மலைக்கும் மடுவுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் உள்ளது. ஓபிஎஸ்ஸுடன் நன்கு அறிமுகம் கொண்ட அதிமுக உறுப்பினர்கள் கூட, அவருடன் முற்றிலும் தொடர்பை தவிர்த்து எடப்பாடி பக்கம் சென்றனர். இவையெல்லாம் அவரது செயல்பாட்டில் இருக்கும் பலவீனத்தையே காட்டுகிறது' என்கிறார் அரசியல் நோக்கர் ஒருவர்.

அதிமுகவில் இப்போதைக்கு ஓபிஎஸ்ஸின் எதிர்காலம் முடிவுக்கு வந்ததாகவே கருதப்படலாம் என்பதே பல அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

ஜெ .காலத்திலிருந்தே இரண்டாம் இடத்தில் இருந்தவருக்கு, மத்தியில் ஆளும் சக்திவாய்ந்த கட்சியின் ஆதரவைப் பெற்றிருப்பவருக்கு இந்த சரிவு ஏற்பட்டிருப்பது எதைக் காட்டுகிறது?

‘தைரியலட்சுமியைக் கைவிட்டவரை பிற லட்சுமிகள் எல்லாம் கைவிட்டுவிட்டனர் என்பதையே இது காட்டுகிறது. அரசியலில் ரிஸ்க் எடுப்பவரே ரஸ்க்  சாப்பிட முடியும்,' என்கிறார் மூத்த அரசியல் நோக்கர் ஒருவர். சரிதானே?

மார்ச், 2023